வெள்ளி, 23 டிசம்பர், 2011

நாதஸ்வர ஓசை





ஓவியம் அது சொல்லும் பல ஆயிரம் கவிதை
காவியம் அது சொல்லும் பல ஆயிரம் விதை
மஹா காவியம் அதனுடன் இணைந்த நாதம்
அந்த விந்தை வித்தை இந்த நாத ஸ்வர ஓசை
தேவனும் ரசிக்கும் நாதஸ்வர ஓசை
இந்த மகாதேவன் கிரிதரனின் பெயர் இணைத்திடும்
நப்பாசை .........

வண்ணநிலவனின் எழுத்துக்கள்.



வண்ணநிலவன் ..முதன்முதலாக பாரத ஸ்டேட் பேங்க் திருநெல்வேலி கிளை எழுத்தர் .. என் இனிய நண்பர் ...கிரிதரன் மகாதேவன் என்பதில் நான் பெருமகிழ்சி கொள்கிறேன்


வண்ணதாசன் & வண்ணநிலவன் - சாரல் இலக்கிய விருது 2012


2012ம் ஆண்டுக்கான சாரல் விருது இரண்டு விருதுகளாக இரண்டு எழுத்தாளர்களுக்கு தனித்தனியே வழங்கப் பட உள்ளது. விருது பெறுபவர்கள் வண்ணநிலவன் மற்றும் வண்ணதாசன்.

வண்ணநிலவன்

எளிமையின் அப்ராணித் தோற்றத்தோடு,

பற்றிப் படர்ந்து ஆழமாய் ஊடுருவி,

நம்மைப் பாடாய் படுத்தி விடுபவை

வண்ணநிலவனின் எழுத்துக்கள்.



சொல்லிலடங்கா அந்த சூட்சுமங்களை,

நாம் விரும்புகிற பாடாகவும் மாற்றி விடுவதுதான்,

அந்த அபூர்வக் கலைஞனின் எழுதுகோல் நிகழ்த்துகிற மாயம்.



தமிழ்ச்சமூகம்,

அதுவரை எழுத்தின் வழியே அறிந்திராத சில பிரதேசங்களின் மீது,

வெளிச்சம் காட்டி நம் பார்வைக்குத் தந்த கதைக் கலைஞன் அவர்.



நல்லவனும் கெட்டவனுமாய் ப்ரியமும் சிநேகிதமுமாய்,

வெம்மையும் வெறுமையுமாய் குரோதமும் வெறியுமாய்,

நவநவமாய் அவர் உலவவிட்ட பாத்திரங்களின் வழியே,

அவர் சொல்லிச் சொல்லி தீராமல் சொல்வது -

அன்பெனும் மந்திரம் தவிர வேறேதுமில்லை.



தன்னை ஸ்தாபித்துக் கொள்ளும் கடுகளவு முனைப்புமின்றி,

மொழிக்கு வளம் சேர்க்கும் பரிட்ஷார்த்த முயற்சிகளோடு,

நெல்லை நாட்டு பாஷையின் சுகந்தத்தை கமழவிட்டபடி,

புது வித புவிப்பரப்பில், ஞானியின் தேசாந்திரம் போல்

தூரங்களை கடந்துகொண்டிருப்பவர் வண்ணநிலவன்.



இந்த ராமச்சந்திரனைப் பார்த்துத்தான்,

தேவன் அப்பத்தைத் தந்துவிட்டுப் போனார்.

அவரோ, அதை இன்றுவரை எல்லோர்க்கும் பங்கிட்டுத் தந்தபடி இருக்கிறார்.

பிடப்பிட குறையாத அந்த மகிமை அப்பத்திலா?

அதைப் பிட்டுப்பிட்டுத் தருகிற அந்த அற்புத விரல்களிலா?



வண்ணதாசன்

தூரத்தில் தலை கோணி

சங்கோஜமாய் நின்றபடியே,

நேசத்தின் விகசிப்போடு நெய்த

ஓரு மெல்லிய சல்லா துணியால் போர்த்தி,

நம்மை தழுவிக்கொள்ளும் வாத்சல்யம் கொண்டவை

வண்ணதாசன் எழுத்துக்கள்.


எளிமையும்

நேர்மையின் நீர்மையும் நிறைந்தவை

அவ்வெழுத்துக்கள்.


ஒளியற்ற மனங்களிலும்

அன்பின் அகலை ஒளிரவிட்டு

சப்தமின்றி நகர்பவை.


திசையைத் தொலைத்தவனுக்கும்

பயணத்தை துவங்குபவனுக்கும்

வழித்துணையாய் வருகிற குளிர் நிலா.


முழுமையாய் அறிந்தவனுக்கு

அது சம்பூர்ண கல்யாணி.

புதியவனுக்கு துவிஜாவந்தி.


கரிசனக் கனிவை சுமந்தபடியும்

புதுப்புது சாளரங்கள் திறந்த படியும்

ஸ்தூலமாய் ஒலிக்குமந்த சுநாதத்தை

ஒரு முறைக் கேட்டவனும்

பாக்கியவான் தான்.



இந்த இரண்டு மகத்தான இலக்கிய ஆளுமைகளை இந்த ஆண்டின் சாரல் விருதுக்காக தேர்ந்தெடுத்தமைக்காக ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.
தகவல்
உதவி :
- ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை
சௌர்சே information
http://www.robertarockiamtrust.com